திருவள்ளூர்: இலவச வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடுகள் வேண்டும் என திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 162 திருநங்கைகள் இணைந்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்துவருகின்றனர்.
சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ள தங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவி சுந்தரி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வீடின்றி பசியோடும் பட்டினியோடும் தங்குவதற்குச் சரியான இடம் இன்றி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் பாதுகாப்பில்லாமல் தங்கிவருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துவருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏழு வருடங்களுக்கு முன்பு பொன்னேரியில் வசித்துவந்த பதினோரு திருநங்கைகளின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இன்னும் தமிழ்நாடு அரசு எந்தவித நிதி உதவியோ அல்லது வீட்டுமனைப்பட்டாவோ வழங்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் கனிவுடன் தங்களது மனுவை பரிசீலித்து, நியாயமான கோரிக்கையான வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடுகளை தமிழ்நாடு அரசு 162 திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும் என்று மனு அளிக்கவந்த திருநங்கைகள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: திருநங்கைகளின் பசுமை வீடு... சுயம்பாய் வாழ வழிகாட்டிய தூத்துக்குடி ஆட்சியர்!