ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (26), பைனான்ஸ் தொழிலதிபரான இவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான புவனேஸ்வரிக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்றரை வயதில் மகன் உள்ளான்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து புவனேஸ்வரி மகனுடன் அம்பத்தூர் அடுத்த மேனாம்பட்டு பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூரில் இருக்கும் தனது தாயாருக்கு போன் செய்து மகன் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக திருவாரூருக்கு அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் தாயார் மீண்டும் தொடர்பு கொண்டபோது டவுன் பகுதியின் வெளிப்பகுதியில் மகனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது பேரன் இறந்திருப்பதும், சிறுவனை எரிக்கும் முயற்சியில் புவனேஸ்வரி ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே திருவாரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தபோது அவன் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்தது சென்னை அம்பத்தூர் பகுதி என்பதால், அந்தப் பகுதி காவல் துறையினருக்கு வழக்கை மாற்றினர். இதையடுத்து அம்பத்தூர் காவல் துறையினர் புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள புவனேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, திருவாரூரைச் சேர்ந்த என்னை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தாய்மாமனான சோமசுந்தரம் என்பவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்து-விட்டனர். எங்களுக்கு திருமணமாகி கிஷோர் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தினமும் எனது கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து மனஅமைதிக்காக கடந்த ஆண்டு போரூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்தேன். அப்போதுதான் திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்த அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மண உறவைத் தாண்டிய காதலாக மாறியது.
இதையடுத்து கணவன், உறவினர்களை உதறி தள்ளிவிட்டு மகனை அழைத்துக் கொண்டு என்னுடைய மணஉறவைத் தாண்டிய காதலனான கார்த்திகேயனுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். இங்கு அம்பத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திகேயனுடன் வசித்துவந்தேன். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்த்து கிஷோர் பதற்றமடைந்து அலறி அடித்து அழுவான். இதனால் கிஷோரை அடித்து, உதைத்து வந்தேன். மேலும் மகன் அடிக்கடி இதுபோல் செய்து கொண்டிருந்ததால் எங்களின் மணஉறவைத் தாணடிய காதலுக்கு மிகவும் இடையூறாக இருந்தது.
மே 19ஆம் தேதியன்று கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தபோது, மீண்டும் எனது மகன் அழுததால், ஆத்திரமடைந்து தோசை கரண்டியால் ஓங்கி அடித்தேன். இதில் அவனது தொடையில் எழும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு மகனின் நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்து விட்டான்.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காவல் துறையினரிடம் சிக்கி விடுவேன் என பயந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று எரித்து விடலாம் என மணஉறவைத் தாண்டிய காதலன் கொடுத்த யோசனையின் பேரில் திருவாரூர் கொண்டு சென்றேன். ஆனால் எனது தாயாருக்கு தகவல் கொடுத்ததால், காவல் துறையினரிடம் சிக்கி கொண்டோம் என்றார். மணஉறவைத் தாண்டிய காதலுக்கு பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.