சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் பழமுதிர் நிலையம் உள்ளது. இங்கு பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கடையில் பொருட்களை வாங்க வந்த இரண்டு பெண்கள் சில பொருட்களை திருடி புடவையில் மறைத்து வைத்துள்ளனர். இதனை பார்த்த ஊழியர்கள், அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுகந்தி (49), கோமதி (59) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.