சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சார்லஸ் நகரில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் ராணி(66). இவர் ஆவடியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர் ஆவார். இந்த நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி ராணி வீட்டு வாசல் முன்பு தனது உறவினர்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராணி கழுத்திலிருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நொடியில் பறித்து சென்றார்.
இது குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி செய்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறி செய்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் ஜார்ஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில்,வழிப்பறி செய்த நபர் சென்னை, அண்ணா நகர் மேற்கு, சாந்தோம் காலனி, 1ஆவது தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற செல்வராஜ்(57) என்பது தெரியவந்தது. மேலும் இவர், எல்லை பாதுகாப்பு படையில் ஓய்வுபெற்ற துணை ஆய்வாளர் என்றும், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது அம்பத்துார், நீலாங்கரை, மடிப்பாக்கம், ராயலா நகர், ஆதம்பாக்கம், புழல், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து, ஜார்ஜை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.