திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வாயலூர் கிராமத்தில் உள்ள சின்ன தாமரை, பெரிய தாமரை, மாமணிக்கால் ஆகிய 3 ஏரிகளை இணைத்து, புதிய நீர் தேக்கம் உருவாக்குவது தொடர்பாக நேற்று (ஜன. 22) தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழகத் தலைவர் சத்தியகோபால் தொடர்புடைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் நீர் தேக்கம் உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளான மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இரட்டை ஏரிகளான காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர் தேக்கம் அமைத்தல், கடல்நீர் ஊடுருவலை கட்டுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
பிறகு, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள பெருவாயல் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, சானாபுத்தூர், பாஞ்சாலை, பெரிய ஓபுளாபுரம் ஆகிய ஓடைகளில் 3 சிறு தடுப்பணைகள், 3 ஓடைகள் சேரும் இடமான ஏழு கண்கள் பாலத்தின் மேற்புறம் ஒரு தடுப்பணை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
நதிகள் மறு சீரமைப்பு கழகத் தலைவர் ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொதுப்பணித் துறை பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க...'நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்' - கமல்ஹாசன் ட்வீட்