திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுத் தரப்பில் 12 புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஏற்கனவே முடிவுற்ற கட்டடங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் 7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார்.
மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்துகிறார்.
இதற்காக அவர் வரும் வழிகளில் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் வழிநெடுக பிரமாண்ட கட் அவுட்டுகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைத்துள்ளனர்.
முதலமைச்சரின் வருகைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு அதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிவுற்ற நிலையில் உள்ளன.
முதலமைச்சரின் வருகைக்கான ஏற்பாட்டுப் பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி.வி ரமணா ஆகியோர் இன்று நேரில் வந்து ஆய்வு செய்தனர்.