திருவள்ளூா்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் (ஜன.27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 5.50 மணிக்கு தை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, ஶ்ரீபூதேவி சமேதராக கோயில் வளாகத்தில் உலா வந்து செல்வர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று(ஜன.28) காலை வீரராகவப் பெருமாள் ஹம்ச வாகன அலங்காரத்திலும், இரவு சூரியபிரபை அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். தை மாத பிரமோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று (ஜன.29) காலையில் கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையும் படிங்க: பணி மாறுதல் கலந்தாய்வை புறக்கணித்த பட்டதாரி ஆசிரியர்கள்