திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாரளித்த குடும்பங்களைச் சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த நபர்களின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 102 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு அந்த சடலங்கள் குறித்த விளக்கங்கள் காவல்துறையின் சார்பில் குடும்பத்தாருக்கு விரிவாக கூறப்பட்டது.
பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 102 குடும்பங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டன. இதில் இரண்டு சடலங்களை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல்துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறியும் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டதை போல் அடையாளம் தெரியாத சடலங்களையும் கண்டறியும் மொபைல் அப்ளிகேஷன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மீனாட்சி மற்றும் முத்துக்குமார், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் துரை பாண்டியன் மற்றும் திருவள்ளூர் டவுன் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்