திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில், ஒன்றியக் குழுத் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் சிறப்புக் கூட்டமானது கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்களின் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது குறித்தும் விவாதித்தனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக, பாமக, திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையினால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் பேசிய திமுக உறுப்பினர், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனவும் துணைத் தலைவருக்கென ஒரு தனி அறை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் புதிதாக அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் பழைய தீர்மானத்தின் நகல் போன்று உள்ளது எனவும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி விவாதித்தார். இதனால் அந்தக் குறிப்பிட்ட தீர்மானம் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் தொடங்கப்படும் நிறுவனங்களில் ஒன்றியத்துக்குள்பட்ட இளைஞர்களுக்கு 50 விழுக்காடு வேலை வழங்க வேண்டும் எனவும் இதன்மூலம் ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் இதனை தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொடுக்கப்படும் மரியாதை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை எனவும் விவாதித்தார்.
இதன்பின்னர் கோரிக்கைகளை பரிசீலித்து கடம்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி உறுதிஅளித்தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பதிவேட்டில் கையெழுத்திட்டனர். சலசலப்புடன் தொடங்கிய இக்கூட்டம் மட்டன் பிரியாணி உடன் இனிதே நிறைவுற்றது.
இதையும் படிங்க... ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக-திமுக மோதலால் சலசலப்பு