சென்னை மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு சூறைக்காற்று வீசிவருவதால், 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதால் உப்பங்கழி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
இதன் காரணமாக படகுத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு படகுகள் தண்ணீரில் அடித்துச் சென்றதால் மீனவர்கள் தங்கள் படகுகளை அங்கிருந்து கயிறு மூலம் கட்டி பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
இதேபோன்று மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அச்சமடைந்துள்ள மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே சென்னை எண்ணூர், திருவெற்றியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது, இதன் காரணமாக மீன்பிடித் துறைமுகத்திற்குள் கடல்நீர் சூழக்கூடிய அபாயம் இருப்பதால் மீனவர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.