திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் தனது முதல்கட்ட தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார்.
அதன்படி, திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் பிவி ரமணாவை ஆதரித்தும், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோ. அரியை ஆதரித்தும், திருவள்ளூர் நகர் பகுதியில் திறந்த வேனில் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், "திருவள்ளூரில் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு தான். புதிதாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவந்தது அதிமுக - பாஜக அரசால் தான். மத்தியில் பாஜக அரசு, தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைக் கொடுத்து வருகிறார்கள்.
வெள்ளம் புயல் இடர்பாடு நேரத்தில் உரிய நிவாரணம் தரும் அரசாக இருந்து வருகிறோம். இந்தியாவிலேயே கரோனாவை கட்டுப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. மீண்டும் கரோனா தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என நினைத்துத்தான் சாமி கும்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்.
அனைவரும் அதனால் முகக்கவசம் அணியுங்கள். தமிழ்நாட்டில் ஆற்றங்கரை ஓரம் வீடுகள் இல்லாத ஏழைகள் என மொத்தம் 12 லட்சம் பேர் கணக்கிடப்பட்டு, அதில் இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்.
மாணவர்களுக்கு பல்வேறு இலவசங்கள் அளித்ததால் தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016இல் அறிவித்த தேர்தல் அறிக்கை நூற்றுக்கு நூறு அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிற பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் நிச்சயம் வழங்குவோம். பெண்களின் கஷ்டத்தைப் போக்குவதற்காகவே வாஷிங் மிஷின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை