திருவண்ணாமலை மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அன்பு (30). லாரி ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடியில் இயங்கிவரும் சந்தைக்கு லாரிகளில் சரக்குகளை ஏற்றிவருவது வழக்கம்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மதுபோதையிலிருந்த அன்பு, சந்தைப் பகுதியில் பணப்பிரச்னை காரணமாக லட்சுமணன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது தகராறு முற்றவே லட்சுமணன், கீழே இருந்த ஆட்டுக்கல்லை எடுத்து அன்புவின் தலையில் போட்டு கொலைசெய்தார். இது குறித்து அன்புவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பெயரில் திருவேற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிபதி செல்வநாதன் இன்று வாசித்தார்.
அதில், பணப்பிரச்னை காரணமாக கொலைசெய்த குற்றத்திற்காக லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய்அபராதமும்விதித்துஉத்தரவிட்டார். தீர்ப்பையடுத்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் லட்சுமணன் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.