திருவள்ளூர்: திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்டது தொழுதாவூர் ஊராட்சி. இங்கு அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே 6 ஏக்கர் பரப்பளவில் வெள்ளை குட்டை என்ற நீர்நிலை பகுதி அமைந்துள்ளது.
வெள்ளை குட்டை பகுதியினை அக்கிராமத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா என்பவரின் தாயார் அருணோதயா, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மற்றும் தொழுதாவூர் ஊராட்சி மன்ற தலைவரான அருள்முருகன் உட்பட 7 பேர் குட்டை நீர்நிலையை ஆக்கிரமித்து 8 வீடுகள், ஒரு கடை உட்பட 9 கட்டடங்களை கட்டியுள்ளனர்.
இம்முறைகேட்டினை எதிர்த்து உடனே ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வலியுறுத்தி அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2020ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்து கட்டடங்களையும் உடனே அகற்ற கூறி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புல் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் நேற்று (ஆக. 7) இடிக்கப்பட்ட நிலையில், ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் வீட்டை மட்டும் அதிகாரிகள் அகற்றவில்லை என்றும் மற்றவர்களின் குடியிருப்புகளை ஒரு தலைபட்சமாக திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஆக்கிரப்பட்டதாக அகற்றப்பட்ட வீடுகளின் சொந்தகாரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, தங்களுக்கு நியாப்படி மாற்று இடம் வழங்க அரசுக்கு கோரிவைத்து போராட்டம் நடத்தினர். இதன் உச்சகட்டமாக திருவலாங்காடு அருகே அரக்கோணம் - சென்னை செல்லும் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து கை குழந்தைகளுடன், பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர், ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி, திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
இதையும் படிங்க: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது