ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தினமலர் நாளிதழ் ஓ சேசப்பா என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தத் தலைப்பிற்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றச் சங்கத்தினர் தினமலர் நாளிதழை சாலையில் வீசி எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிறிஸ்துவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் லாரன்ஸ் பிரபாகரன், பொதுச்செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.