திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனம் பட்டு கிராமத்தில் கலையரசன் (37) - நித்யா (30) என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதுள்ள ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது. இதில் கலையரசன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று (பிப்.22) காலை வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் கதவை திறந்துப் பார்த்துள்ளனர். அப்போது கலையரசன், நித்யா மற்றும் அவரது 4 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து மப்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மப்பேடு காவல் துறையினர், தற்கொலை செய்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்ற பல்வேறு காரணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தற்கொலை தொடர்பாக கடிதம் போன்ற தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை: பல்வேறு தரப்பினர் இரங்கல்!