திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பில்டர்ஸ் ஆகியோரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனை அடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் பூந்தமல்லி அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோகரன் மகன் ராஜேஷ் (32) மற்றும் சுகுமார் மகன் விஷ்வா (23) ஆகியோர் கூட்டாக சேர்ந்து மாமூல் வசூல் செய்து வந்துள்ளனர். மேலும் இவர்களது கூட்டாளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாது ராஜேஷ் மீது ஏற்கனவே 4 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல், கூட்டுக் கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதேபோல் கூட்டாளியான விஸ்வா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து ராஜேஷ் மற்றும் விஷ்வாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் ராஜேஷின் கூட்டாளிகள் 5 பேர் செவ்வாய்ப்பேட்டை அடுத்த அயத்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் தனிப்படை அமைத்து ராஜேஷ் மற்றும் விஷ்வாவை கைது செய்து, இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயத்தூரில் பதுங்கி இருந்த ராஜேஷ் மற்றும் விஷ்வாவின் கூட்டாளிகளான மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்களிடமிருந்து இரண்டு பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழில் செய்யும் பில்டர்ஸ் ஆகியோரிடம் அதிக அளவில் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரே நேரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!