திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் சிலை ஒன்றை நிறுவுவதற்காகப் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக எட்டு அடி உயர சிலை, தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து அக்கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்பொது, கண்ணன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சிலை வைப்பதற்குத் தடை உள்ளதாகக் கூறி, சிலையை எடுத்துச் சென்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சீல் வைத்தனர்.
இதனையறிந்த கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தாமரை செல்வாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் ஏற்படாததால் சம்பந்தப்பட்ட கிராம இளைஞர்கள் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து கண்ணன்கோட்டை கிராம மக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது, அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இல்லாத காரணத்தினால் திடீரென முற்றுகையிட்டு அம்பேத்கர் சிலையை திரும்பத்தர கோரியும் இளைஞர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறு நேரம் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பொன்னேரி காவல் துறையினர், பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க : பீமா கோரோகன் வழக்கை என்.ஐ.ஏ நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய வழக்கு - ஒத்திவைப்பு