நீட் தேர்வில் தேசிய அளவில் 57வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் திருவள்ளூர் மாவட்ட மாணவி சுருதி பெற்றுள்ளார். மருத்துவ படிப்பிற்கான மாணவ மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதில் திருவள்ளூர் மாணவி சுருதி முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை மருத்துவர் கார்த்திகேயன் ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நீட் தேர்வில் தமிழகளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்ததும் பெருமையாக உள்ளது. தனது மகளின் இரண்டு வருடக் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தது தமக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கிறது. தனது மகள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க உள்ளார். அதற்கான கலந்தாய்வில் பங்கேற்க இருக்கிறோம். இதே போன்று கடினமாக நீட் தேர்வுக்குப் படித்தால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் வெற்றி பெறலாம்" என்றார்.