தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பொதுமக்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் நபர் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்து வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் இயந்திரத்தின் பொத்தான்களை அழுத்துவதற்கு முன்பு, வாக்காளரைக் கண்டறியும் இயந்திரம் மூலம் சமிக்ஞை (சிக்னல்) வழங்கப்பட்டு, பின்னர் அவர் அளித்த வாக்கினை தனி கருவி மூலம் தன்னுடைய வாக்குப்பதிவாகி விட்டது என்பதை உறுதிசெய்து கொள்ளும்வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாக்குச்சாவடியினை பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின், பொதுமக்கள் மாதிரி வாக்குச் சாவடியில் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.