திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இயங்கிவரும் புத்தர் உடற்பயிற்சிக்கூடம் சார்பில், ரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான பதிவு முகாம் இன்று நடைபெற்றது.
இதில், உடற்பயிற்சிக் கூட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும், பலர் தங்களது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய புத்தர் உடற்பயிற்சி கூட நிறுவனர் மற்றும் முன்னாள் ஆணழகன் சீனிவாசன், 'மனித உயிர்களின் மகத்துவத்தையும் மனித உறவுகளின் சமத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக, தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக காதலர் தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானப் பதிவு முகாமினை நடத்தி வருகிறோம்' என்றார்.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் ரத்த தானம் வழங்கினால், உடல் மெலிந்துவிடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பயிற்சியாளர்களும் பொதுமக்களும் பெரும் ஆதரவு அளித்து, இந்த முகாமை நடத்த உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் சீனிவாசன், கேஎம்சி செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் விஸ்வநாதன், கின்னஸ் சாதனையாளர் தில் தில் முரளி, கவிஞர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: 'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்