சென்னை செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட சோத்துப்பாக்கம் சாலையில் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கே விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விடுதிகளில் முறையான கழிவுநீர் தொட்டி இல்லாததால் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவுநீரானது பொது கால்வாயில் கலந்து அருகே உள்ள கலைவாணர் குறுக்குத் தெரு மற்றும் சேரன் தெரு ஆகிய பகுதியில் செல்கிறது. இவ்வாறு செல்லும் கழிவுநீர் ஊருக்குள் புகுந்து மக்கள் வசிக்கும் வீட்டினுள் செல்வதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இது குறித்து, அந்த பயிற்சி அலுவலகத்திடம் பலமுறை எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை நடுவே மரங்களை சாய்த்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரியாக கால்வாய்கள் தூர்வாராததால் தனியார் பயிற்சி முகாம் கழிவுநீர் கலப்பதாகவும், இந்த கழிவுநீர் ஊருக்குள் புகுந்து பல நோய்கள் வருகிறது என்று காவல்துறையினரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் வாக்குறுதி கொடுத்ததால், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.