திருவள்ளூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக திருவள்ளூர் நகராட்சி புதூர் தெற்கு மாடவீதி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும், தற்போதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.
ராஜாஜி சக்தி கோயில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதி, ஆஞ்சநேயர் நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதி, பூங்கா நகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களை ஆய்வு செய்து வைரஸ் தடுப்புப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரப்பணியாளர்கள், நகராட்சிப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான கிருமிநாசினிகள் தெளிப்பது, கட்டுப்பாட்டு அறையின் எண்களை சுவரொட்டிகள் மற்றும் தட்டிகள் மூலம் விளம்பரப்படுத்துவது, ஆட்டோக்கள் வாயிலாக தொடர்ந்து மக்களுக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
மேலும், சளி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக 1800 425 510 9 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, நகராட்சி ஆணையர் சந்தானம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.