திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. சென்னை எல்லையை ஒட்டியுள்ள இந்தக்கடையில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மது வாங்குவதற்கு குடைகளுடன் வரிசையில் நின்றிருந்தவர்களின் குடைகளை இழுத்துத் தள்ளி மதுவாங்க விடாமல் விரட்டியடித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மதுக்கடையில் மதுவாங்கும் குடிமகன்கள் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து குடித்துவிட்டு பெண்களிடம் கலாட்டா செய்வதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், சென்னையின் எல்லையிலுள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு எண்ணூர், திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் அதிகளவில் வருவதாகவும், இதனால் இப்பகுதி மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்பட்டுவருகிறது என்றும், வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை என்றும் சமாதானம் செய்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் 'குடி'மகள்கள்: வைரலாகும் காணொலி