திருவள்ளூர்: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும், மீனவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இச்சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க பகுதிகளான செங்கழ நீர்மேடு பகுதிக்கு சென்று ஆய்வுசெய்தார். அங்கிருந்து 3 கி.மீ நடந்து சென்று, கழிமுக பகுதிகளை பார்வையிட்ட அவர், அங்குள்ள மீனவர்களிடம் துறைமுக விரிவாக்கம் வந்தால் ஏற்படும் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னையும் பாதிக்கும். சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து, கடல் அரிப்பு ஏற்படும். விரிவாக்கத்தால் கடல் நீர் நிலப்பரப்பில் உட்புகும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாவட்டத்திலுள்ள ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் தண்ணீர் கடலில் கலக்கப்படுவது தடுக்கப்பட்டு, கிராமங்களில் உட்புகும் எனவும், மழைக்காலங்களில் பெருவெள்ளம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையான எதிர்க்கிறது.
இதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்கு தொடரப்படும் எனவும், ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ள மக்களவை கூட்டத்தொடரில் துறைமுக விரிவாக்கம் குறித்து குரல் எழுப்பப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.