திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தில் சுனாமு இன்ஜினியரிங் எனப்படும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்ட போதே உள்ளூர் ஆட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொழிற்சாலை தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் உள்ளூர் ஆட்களுக்கு வேலை வழங்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, தொழிற்சாலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம், இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஏழு நாட்களுக்குள் நிர்வாக இயக்குநர் கிராம மக்களிடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கருணாநிதியின் உத்தரவை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்!