திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்வந்தான்கோட்டை பகுதியில் சுமார் 75 இருளர் சமுதாய குடும்பங்கள் கடந்த 29 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இம்மக்கள் குடியிருப்பு சுற்றி பாஸ்கர் ராவ் என்பவர் நிலம் இருப்பதால் அந்த நிலத்தை சேல்ஸ் செய்வதற்காக பாஸ்கர் அவென்யூ என்ற போர்டை வைத்து, இருளர் சமுதாய மக்கள் அவர்கள் நிலத்திற்கு செல்லாத வகையில் குடியிருப்பை சுற்றி 7 அடி உயரத்தில் தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வைத்திருந்தார்.
இது தொடர்பாக மக்கள் அவரிடம் முறையிட்டதற்கு நீங்கள் இங்கு வசிப்பதால் தனது நிலம் சேல்ஸ் ஆகவில்லை என்றும், அதனால் தடுப்புச் சுவர் எழுப்புவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தீண்டாமை தடுப்புச் சுவர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததால் கடந்த 12ஆம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீண்டாமை தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இருந்தது கடந்த மாதம் 20 ந் தேதி ETVயில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் அதன் எதிரொலியாகவும் அத்தகைய தீண்டாமை தடுப்புச் சுவரை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அருண்குமார், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினார்கள். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீண்டாமை தடுப்புச் சுவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ETV செய்திக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்... மத்திய அரசு அனுமதி