திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் தோக்கமூர் பகுதியில் புதியதாக அரசு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்குத் தமிழ்நாடு, ஆந்திர மாநிலம் காரூர் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்கள் பகுதி அருகில் மகளிர் தங்கும் விடுதி குடியிருப்பு உள்ளதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறி தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே விதிமுறைகளை மீறி நீர்வழிக் கால்வாயை ஆக்கிரமித்து மதுபானக்கடை திறக்கப்படுவதாகவும் தமிழ்நாடு மதுபானங்கள் விலை குறைவு என்பதால் அதிகளவில் இங்கு ஆந்திராவிலிருந்து மதுபாட்டில்களை வாங்க வருவதால் கடந்த காலங்களை போன்று தமிழ்நாடு-ஆந்திர கிராம மக்களிடையே பல்வேறு மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே மதுபான கடையை இப்பகுதியில் திறக்கக் கூடாது எனப் பல்வேறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதுவரை மதுபான கடைக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான மது பானங்களை லாரியில் இறக்க வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் மதுபானங்களை இறக்காமலேயே கொண்டுசென்றனர். இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் விற்பனை மேலாளர் சீனிவாசன் என்பவர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.