திருவள்ளூர்: காக்களூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரமேஷ் காந்த். இவரது மனைவி தேவி. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர். ரமேஷ் காந்தின் தாயார் கடந்த 7ஆம் தேதி காலமானார்.
இதனையடுத்து, தாயின் துக்க நிகழ்ச்சிக்காக கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனையடுத்து, சடங்குகள் முடிந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 26) காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் வைத்திருந்த 23.5 சவரன் நகை 60 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பொருள்கள், இரண்டு மடிக்கணினிகள் கொள்ளைபோனது தெரியவந்தது.
வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவை சோதனை செய்தபோது கடந்த 23ஆம் தேதி அதனை அணைத்தது தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.