திருவள்ளூர்: சோழவரம் அடுத்த பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் ரவுடி ரமேஷ் என்கிற சுப்பிரமணி (24). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அரவிந்தன், உருளை வினோத் உள்ளிட்ட இவரது நண்பர்கள் மது அருந்துவதற்காக ரமேஷை அழைத்து சென்றுள்ளனர்.
ஆட்டந்தாங்கல் பகுதியில் ஏரிக்கரை அருகில் அமர்ந்து மதுஅருந்தி கொண்டிருந்த போது அரவிந்தன் உள்ளிட்டோர் ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சோழவரம் போலீசார் ரத்தக் காயங்களுடன் இருந்த ரமேஷை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய சோழவரம் காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வீரராகவன், விஜய், வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்து சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரவிந்தனுக்கும், ரமேஷுக்கும் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. எனினும் அரவிந்தனும், ரமேஷும் எப்போது போல ஒன்றாக பழகி வந்துள்ளனர். இந்த முன்விரோத்தால் ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய அரவிந்தன் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை அழைத்து வந்து மதுஊற்றி கொடுத்து வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தப்பியோடிய முக்கிய குற்றவாளியான அரவிந்தன், உருளை வினோத் ஆகிய இருவரை சோழவரம் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரவிந்தன் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான முன்விரோதம் குறித்து முழுமையான தகவல் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கூட்டாளியை திட்டமிட்டு அழைத்து சென்று மது ஊற்றி கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு நிர்ணயித்த நேரத்தை பொருட்படுத்தாத டாஸ்மாக்... காலையில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ்!