முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடு திருத்தணியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல், இந்தாண்டும் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நான்கு மணியளவில் சிறப்பு பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம் போன்ற மூலப்பொருள்களைப் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் விழா சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் முருகனுக்கு சிறப்பு தங்கக்கவச அலங்காரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருக்கோயில் வளாகத்தில் உற்சவர் சண்முகநாதர் தங்க ஆபரணத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் காவடி மண்டபத்தில் மூலவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முருகப்பெருமானை வழிபட தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்த பெருமக்கள் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி இன்னிசைப் பாடல்களைப் பாடியவாறு உடலில் அலகு குத்திக்கொண்டு மயில் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, பன்னீர் காவடி எடுத்துவந்து தங்களது காவடிகளை காவடி மண்டபத்தில் முருகப்பெருமானை வழிபட்டு சமர்ப்பித்தனர்.
இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ள நிலையிலும் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தற்போது திருத்தணி ஸ்தம்பித்துப் போயுள்ளது.