திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல். அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரூபன் (7). ரூபன் அரசு பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் (மார்ச் 9) மாலை வீட்டில் இருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு நண்பருடன் விளையாட சென்றான். நெடுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 11) புழல் ஏரிக்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஏரியில் சிறுவன் ஒருவன் பிணமாக மிதப்பதைக் கண்டு, செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டது காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட சென்ற சிறுவன் பிணமாக மீட்கப்பட்டது, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு!