திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா விளையாட்டு மேம்பாட்டு திட்ட தொடக்க விழா ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். இதனை தொடர்ந்து அமைச்சர் பெஞ்சமின், பாண்டியராஜன், அம்பத்தூர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்கள் அலெக்சாண்டர், சிருனியம் பலராமன் ஆகியோர் கிரிக்கெட் மற்றும் வாலிபால் விளையாடி அசத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெஞ்சமின், "திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் 10 பேரூராட்சிகளிலும் இளைஞர் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 வயது முதல் 35 வரை உள்ள வாலிபர்களுக்கு கிரிக்கெட் ,கால்பந்து, கபடி, வாலிபால் போட்டி பயிற்றுவிக்கப்படும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஒரு திறமையான விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இத்திட்டம் அமையும்" என்றார்.