திருவள்ளூர்: “வளர்ச்சிப் பாதையில் முதலிடம், மகிழ்ச்சி பாதையில் தமிழகம்” என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மணவாள நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் கே. பழனிசாமி கலந்துகொண்டார். திருவள்ளூர் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.வி. ரமணா வரவேற்றுப் பேசினார். முதலில் நெசவாளர் சங்கத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்ற பெண் தமிழ்நாட்டு முதலமைச்சரின் சாதனைகளை வாழ்த்திப் பேசினார்.
மேலும், நெசவாளர்களுக்கு பொதட்டூர்பேட்டையில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும். நெசவாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும். நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 700 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து தேவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமு பேசுகையில், விவசாயிகளுக்கு அனைத்து தேவைகளும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசும்போது, “கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலையிருந்தது. அதனைக் கருத்திற்கொண்டு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளித்ததன் காரணமாக, இந்த கல்வியாண்டில் 435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அதிகபட்சமாக 27 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் தற்போது 32 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி இருந்தாலும் விவசாயிகள் இரவு பகல் பாராமல் உழைத்து அதிக மகசூலை ஈட்டியுள்ளனர். அதிமுக அரசு விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சத்து அந்த 42 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் புயலாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம் கேட்டுப் போராடிய விவசாயிகளைச் சுட்டு வீழ்த்திய கட்சி திமுக என்பதை விவசாயிகள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
10 மாவட்டங்களில் கால்நடை விவசாயிகளுக்குக் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.2,000 கோடியில் உணவுப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் தலைவாசல் பகுதியில் ரூ.1023 கோடியில் கால்நடை பூங்கா மற்றும் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகள், இலவச மின்சாரம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.