செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. அரசியல் வாசத்துடன் இப்படத்தில் கதைக்களம் உருவாக்கப்பட்டிருப்பது, படத்தின் ட்ரெய்லர் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடையே சற்று கூடுதலாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே, நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் கட் அவுட், பேனர்களை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி புறவழிச்சாலையில் 220 அடியில் சூர்யாவுக்கு ராட்சத கட் அவுட் ஒன்றை ரசிகர்கள் அமைத்திருந்தனர். இந்த கட் அவுட் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இந்த கட் அவுட் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையிலான ஊழியர்கள் கட் அவுட்டை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இந்த விவகாரம் திருத்தணி சூர்யா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.