திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நேற்றுமுன் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து அம்மன் சிலைக்கு மேல் இருந்த மூன்று கோபுரக் கலசங்களைத் திருடிச் சென்றுள்ளனர். கலசம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம், புல்லரம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர், தடயங்களைச் சேகரித்தனர். புகாரின்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மஞ்சுளா சிட்டிபாபு கூறும்போது, “எங்கள் ஊரில் உள்ள முக்கியக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்துள்ளோம்.
கலசத்தை திருடிச் சென்றுள்ள அடையாளம் தெரியாத நபர்களைக் கைதுசெய்து, காணாமல்போன கலசத்தை மீட்டு அதே இடத்தில் நிறுவ வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல கோயில் சிலைகள் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்த விசாரணை நடைபெற்று சிலைகள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.28 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கிய தொண்டு நிறுவனம்