திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பூங்காவில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மரம் உயிரினத்தின் உயிர் மூச்சு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு நின்றனர்.
மேலும், ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தாமல் தூக்கி எறிவேன் என்றும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க பாடுபடுவேன் என ஆட்சியர் கூறிய உறுதி மொழியையும், மாணவர்கள் ஏற்றனர்.
இறுதியில் ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டார். இதில் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, திருவள்ளூர் வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.