திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உணவு, பாரம்பரிய விளையாட்டுகள், மூலிகைகள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்கவும், அவற்றைப் பயன்படுத்த வலியுறுத்தியும் கண்காட்சி அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், பரமபதம் உள்ளிட்ட மறைந்து வரும் விளையாட்டுகள், அழிந்து வரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கீழாநெல்லி, கற்றாழை, பிரண்டை, துளசி உள்ளிட்ட மூலிகைகளை பள்ளிமாணவர்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
இதில் ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து பாரம்பரிய விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர்.