மத்திய அரசு ஏற்றுள்ள புதிய கல்விக் கொள்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் ஒரு கோடி அஞ்சல் அட்டையை பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருவள்ளூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய மாநில பொதுச்செயலாளர் ரா. தாஸ் கூறியதாவது;
மத்திய அரசு இந்த புதிய கல்விக் கொள்கை சட்டம் குறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து தலைமை ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது. தமிழ்நாட்டில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதில் தேவையான திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஒரு கோடி அஞ்சல் அட்டையை பிரதமருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் அனுப்பும் போராட்டத்தை முதன்முதலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இருந்து தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் இரண்டரை லட்சம் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் கல்வியில் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைப்பதால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களது கல்வி இடை நிற்றல் சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் அல்லது அதில் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார்.