திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாள்களாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்றுமுதல் தமிழ்நாட்டில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஒருவார காலமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. திருவள்ளூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது அவர், பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முள்செடிகளை அகற்றி சீர்செய்வதையும், வகுப்பறை, குடிநீர்த் தொட்டி, ஆய்வகம், சத்துணவுக்கூடம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர், "நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும். 10, 12ஆம் வகுப்புகளுக்கு முழு நேர வகுப்புகளும், 9, 11ஆம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளும் நடத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆசிரியர்களில் 18 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவ மாணவிகளுக்கும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக டெஸ்ட் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் 85 விழுக்காடு கட்டணத்தை தவணை முறையில் மட்டுமே வசூலிக்க வேண்டும். மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது, அதேபோல் மாணவர்கள் பள்ளிக்குப் பெற்றோர்களின் அனுமதியோடு மட்டுமே வர வேண்டும். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.