திருவள்ளூர்: தமிழ்நாடு உணவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன்19) திருமழிசை, திருவள்ளூர், ஈக்காடு ஆகியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நியாய விலைக்கடையில் பயனாளிகள் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி எப்படி பொருட்களைப் பெறுகிறார்கள் என்பது குறித்தும் பயனாளிகள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும் அதை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் நேரத்தில் திறந்து செயல்பட்டதாகவும் தற்போது அதிகளவில் அறுவடை செய்வதால் கூடுதல் நேரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; அதே நேரத்தில், நேரடி கொள்முதல் நிலையங்களில் பெறக்கூடிய நெல்லை இயந்திரங்கள் மூலம் அரிசியாக மாற்றி அதை எப்படி தரமாக விநியோகிப்பது என்பது குறித்தும் அதேபோல் பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றையும் தரமாக எவ்வாறு வழங்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
2.17 கோடி குடும்ப அட்டைகள்: தமிழ்நாட்டில் பொது மக்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வழங்க மொத்தம் ரூ.35 ஆயிரத்து 432 நியாய விலைக்கடைகள் உள்ளன என்றும்; தமிழ்நாட்டில் மொத்தம் 2.17 கோடி குடும்ப அட்டையும், அதில் சர்க்கரை மட்டும் வாங்க 3.84 லட்சம் குடும்ப அட்டையும், எந்த பொருளும் வேண்டாம் என சான்றிதழாக பயன்படுத்த மட்டும் என 58 ஆயிரத்து 885 கார்டுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
கடத்தல் அரிசிகள் பறிமுதல்: மேலும் அவர், 'நியாய விலைக்கடையில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு கடத்துவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 7.5.21 முதல் 17.6.22 வரை 7,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 4,000 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
முறையற்ற சிலிண்டர் விற்பனை தடுப்பு: மேலும், 401 வழக்குகள் மூலம் 23 ஆயிரத்து 801 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரை வணிக நோக்கத்திற்காக விற்பனை செய்ததாக எரிவாயு சிலிண்டர் வழக்குகள் 775 பதிவு செய்யப்பட்டு 894 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6.62 கோடி. இதன் சந்தை மதிப்பு ரூ.12.62 கோடி' என்று கூறியுள்ளார்.
மேலும் நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்க விருப்பம் இல்லாத பொருட்களை கடையில் இருந்து நேரடியாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 9151 பேர் கைது செய்யப்பட்டு, 1,872 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் செய்ய கூடுதல் இயந்திரங்கள்: 'தமிழ்நாட்டில் தரமான பொருட்கள் நியாய விலைக் கடையில் கிடைப்பதால் அதனை வாங்கி பொதுமக்கள் பயன்பெறவேண்டும்; வாங்க விருப்பம் இல்லையென்றால், அதற்கு தகுந்தாற்போல் குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொள்முதல் செய்ய காலக்கெடு அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைகின்றனர். எனவே, இதைத்தடுக்கும் விதமாக, கூடுதல் இயந்திரங்கள் அமைத்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் உறுதியளித்தார்.
கேழ்வரகு வழங்க நடவடிக்கை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் அறிவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். தர்மபுரி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கேழ்வரகு வழங்க தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தற்போது மாநிலம் முழுவதும் மேற்கொள்ளும் ஆய்வின்போது களப்பணியாளர்கள் விடுக்கும் கோரிக்கைகளையும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது உணவுப் பொருட்கள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகரன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் சிவஞானம், கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் சங்கர், திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் மகாபாரதி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் சேகர், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர் முகஉதவியாளர் எபிநேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி - தொடங்கி வைத்த அமைச்சர்