மறைந்த எஸ்பிபியின் உடல் மருத்துவமனையிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர் திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, அவரது உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யவுள்ள இடத்தில் ஜேசிபி வாகனங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 14ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று (செப்.24) முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இன்று (செப்.25) மதியம் 1.04 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க...'இசையை இழந்த மொழியாய் அழுகிறேன்' - எஸ்.பி.பி மறைவு குறித்து வைரமுத்து!