திருவள்ளூர் காக்களூர் சாலையில் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகளைக் கொண்டு மாதந்தோறும் ஐந்நுாறு, ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளாக பாலிசி பணம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் பாலிசி முடிவு பெற்ற பின்பும் பாலிசித் தொகையை திருப்பி அளிக்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஏஜென்டுகள் ஆகியோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் கட்டிய சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேலான பணம், பாலிசி முதிர்வுற்ற பின்பும் உரியவர்களிடம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே உரிய முறையில் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.