திருவள்ளூர்: சோழவரம் அடுத்த எடப்பாளையம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் முரளி (23). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று (அக் 29) முரளி, தமது தாய் வச்சலா உடன் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், முரளியை தாயின் கண் முன்னே கடத்திச் சென்றுள்ளது.
இதனையடுத்து அவரது தாய் அலறியடித்தபடி அருகில் இருந்தவர்கள் துணையுடன் அக்கம் பக்கத்தில் முரளியை தேடியுள்ளார். இறுதியாக சோழவரம் ஏரியின் பின்புறத்தில் உள்ள அலமாதி ஏரியில் தலை, முகம் மற்றும் பிறப்பு உறுப்பில் படுகாயங்களுடன் முரளியை மீட்டனர். அதன்பின் முரளியை அலமாதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் முரளி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரளி உயிரிழந்தார். இதனிடையே கொலை வழக்குப்பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர், திலீப், தீபன், ஆறுமுகம் மற்றும் நவீன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகன்