தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், வீட்டுமனைப் பட்டா, தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அந்தெந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளித்தனர். இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
அப்போது, அங்கு வந்த சமூக ஆர்வலர் நர்மதா, நடிகர் பாக்யராஜ் போல் நடனமாடி ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், "சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் தேக்கங்களாக விளங்ககூடிய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் உள்ளிட்ட அணைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். போதிய மழையில்லாததால், பூண்டியில் நீர் முற்றிலும் குறைந்து மீன்கள் மடிந்து, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று எச்சரித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நர்மதா, பாக்யராஜ் நடனமாடியது, அங்குள்ள பொதுமக்களை கலகலப்பாக்கியது.