திருவள்ளூர் மாவட்டத்தையடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன.
தற்போது பெய்த வட கிழக்கு பருவமழையில் தொழிற்சாலைப் பகுதியில் மழை நீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனைப் பயன்படுத்தி ஒரு சில தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரசாயனக் கழிவையும் மழை நீரோடு கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர், ஆவடி சாலையில் தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் தேங்கிய மழை நீரால் தொழிலாளர்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தேங்கிய மழை நீரை அகற்றக் கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனால் தேங்கிய நீரை கால்வாய் வெட்டி தண்ணீர் குளம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. அதனை அறிந்த தண்ணீர்குளம் பகுதி கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், வருங்காலத்தில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தெரிவித்து அம்மக்களை ஆசுவாசப்படுத்தினார்கள்.
மழை நீரோடு ரசாயனக் கழிவு நீரும் கலந்து ஏரிக்கு செல்வதால் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய பூமி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் குடிநீரும் மாசடைந்து தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை முடங்கும் அபாயம்!