17ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளிவரவுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணும்போது அதிமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளர் அலுவலகத்தில் திருவள்ளூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்டிகளின் சூழ்ச்சிகளை கண்டறிந்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அதனை முறியடிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணி முடியும் வரை நிர்வாகிகள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அனைவரும் வெற்றிக்கனியை பறிக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் செவ்வை சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.