திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்துள்ள கொள்ளுமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், கொதிகலன் பழுது பார்க்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வெல்டிங் வைத்த போது வெப்பம் தாங்காமல் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (28), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோவிந்த குமார் (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜா (42) உள்ளிட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆரணி காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெயிண்ட் தொழிற்சாலையின் மேலாளர் தீபக் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே பாதுகாப்பு குறைபாட்டால் இந்த தொழிற்சாலையில் நான்கு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அலுவலர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காதது தான் தற்போதைய உயிரிழப்புக்குக் காரணம் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல தனியார் பிரியாணி ஹோட்டலில் திடீர் தீ விபத்து!