திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஓஜி குப்பம் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருத்தணி ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து திருத்தணி அரசு கலைக்கல்லூரி அருகே உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் சில காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்விடத்தில் 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சாவினை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.
அப்போது கஞ்சாவை விற்பனை செய்து வந்தது பட்டாபி ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் (24) என்பது தெரிய வந்தது. அவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் அவரை திருத்தணி காவல் துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருத்தணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 7 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கென்யாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!