திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகவும் மழை நீர் வடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "வெள்ள நிவாரண நிதி என்பது இழப்பிற்கு ஏற்றார் போல வழங்குவது தான் சரியாக இருக்கும். நிவாரண தொகை அளிப்பதை எப்போது துவங்கி எப்போது முடிப்பது. மகளிர் உரிமை தொகை போன்று அறிவித்து 2 ஆண்டுகள் பின்னர் அடுத்த வெள்ளம் வரும் வரையும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது.
நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை வீசியவர்களுக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. நல்வாய்ப்பாக இதில் இஸ்லாமியர் இல்லை இருந்தால் தேர்தல் வரை இதை வைத்தே ஒட்டி இருப்பார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் எல்லாம் செய்வார்கள், இதுபோன்ற சிந்தனை அவர்களுக்குத் தான் வரும். அவர்கள் வீசியதுக் குண்டு இல்லை வண்ணப் பொடி தான்" என கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "இயலாதவன் வேறு என்ன செய்யமுடியும்? கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். தக்க அறிவு இருக்க வேண்டும். உண்மை, நேர்மை இருக்க வேண்டும். வேறு வழி இல்லாமல் பேசக் கூடாது வெளியில் போ என கூறுகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்களவையில் பேச விடவில்லை என்றால் எங்குப் பேசுவது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, கோவா விமான நிலையத்தில் CISF பாதுகாப்பு வீரரால் தமிழ் பெண் அவமதிக்கப்பட்ட செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார், உன் மொழி உயர்ந்தது போன்று என் மொழியும் உயர்ந்தது. நான் தமிழக முதலமைச்சர் ஆகிவிட்டால் ஒரு இடத்தில் இந்தி எழுதிட முடியுமா? நம் மொழி அவமதிக்கப்படும் போது நமது கோவத்தை உணர்த்த வேண்டும்.
மேலும், அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு தர வேண்டும். அப்படிக் கேட்ட நிதியைத் தரவில்லை என்றால் ஒட்டு போட விடமாட்டேன். எனக்கு நிதித் தராதவனுக்கு ஒட்டு எதற்கு?" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!