திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அந்த வகையில், திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பசுபதி போட்டியிடும் நிலையில், அவரை முன்னிறுத்தி சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
புதிய தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் வெல்வோம்
"தீக்குச்சி எரியாமல் தீபங்கள் கிடையாது. ஆனால் யார் தீக்குச்சி என்பதுதான் இங்கு பிரச்னை. அதனால்தான் உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள், முதலில் நாம் குடியிருக்கும் தெருவைக் சுத்தம் செய்தால், தேசம் தானாக சுத்தமாகும் என்ற முடிவை எடுத்து களத்தில் இறங்கி இந்தப் பணியை செய்கிறோம்.
ஊழல், லஞ்சம், பசி, பஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை மது மற்றும் மத போதை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை இது ஏதும் அற்ற ஒரு தூய தேசம் படைக்க உங்கள் பிள்ளைகள் துணிந்து இந்த வேலையை செய்கிறோம்.
அதனால்தான் "புதிய ஒரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் அதை வெல்வோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தத் தேர்தலை எதிர் கொள்கிறோம்.
உழவை மீட்போம்
"உழவை மீட்போம், உலகைக் காப்போம்" என்ற உயர்ந்த நோக்கத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் பசுபதிக்கு 'விவசாயி' சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அனைவருக்கும் சரியான, சமமான கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை, படித்தவர் படிக்காதவர் என பாரபட்சமற்ற முறையில் அனைவருக்கும் அரசு வேலை உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.
50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வழிவகை செய்கிறேன்
"ஆயிரம், ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்" என்ற வாக்குறுதியை கொடுக்க நான் தயாராக இல்லை. நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொள்ள அரசு வேலை தருகிறேன்.
இதைச் செய்ய உங்கள் மதிப்புமிக்க வாக்கை விவசாய சின்னத்தில் செலுத்துங்கள். மூன்று வேளை உணவு அருந்துகிற அனைவரும் அந்த விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும்" என்றார்.
இந்தப் பரப்புரையின்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான 'கரிகால சோழனா' என்ற பாடலை சீமான் வெளியிட, திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பசுபதி அதனைப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'அரசியலில் நாங்கள் அவர்களுக்கு சீனியர்' - விஜய பிரபாகரன்